குவைத் மனிதக்கடத்தல் வழக்கில்;அதிகாரி மற்றும் பங்களாதேஷ் எம்.பி-க்கு 4 வருட சிறை,19 லட்சம் தினார்கள் அபராதமும் விதித்து நீதிபதி அப்துல்லா-அல்-உஸ்மான் உத்தரவு பிறப்பித்தார்
Image credit:Official Soure
குவைத் மனிதக்கடத்தல் வழக்கில்;அதிகாரி மற்றும் பங்களாதேஷ் எம்.பி-க்கு 4 வருட சிறை,19 லட்சம் தினார்கள் அபராதமும் விதிக்கப்பட்டது:
குவைத்தில் நடந்த மோசமான மனிதக்கடத்தல் வழக்கில் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் உதவி துணை செயலாளர் ஷேக் மசின் அல்-ஜரா மற்றும் பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிதுல் இஸ்லாம் ஆகிய இருவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் 19 லட்சம் தினார்கள் அபராதமும் நேற்று(28/01/21) வியாழக்கிழமை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குவைத் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா-அல்-உஸ்மான் வழங்கினார்,மேலும் இதேபோல் நேற்று பெண் கரு பிற வழக்குகளில் இரண்டு அதிகாரிகளுக்கும் நீதிபதி தண்டனை வழங்கினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அகமது-அல்-சாதுன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாலிஹ் குர்ஷித் ஆகியோர் குற்றவாளிகள் அல்ல என நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினரான ஷாஹிதுல் இஸ்லாம்,கடந்த 2020 மார்ச் மாதத்தில் குவைத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் குவைத்தில் உள்ள ஒரு முன்னணி துப்புரவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். குவைத் அரசு ஒப்பந்தம் பெற்ற பின்னர், இவர் 20,000 பங்களாதேஷ் தொழிலாளர்களிடம் பணம் பெற்று குவைத்திற்கு வேலைக்கு அழைத்து வந்தார்,மூன்று மாதங்கள் வரையில் சம்பளம் வழங்காத நிலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டுக்கான அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில், ஒவ்வொரு நபரும் 1500 முதல் 2000 தினார்கள் வரையில் முகவர்களுக்கு(ஏஜெண்டுக்கு)செலுத்தி குவைத்திற்கு வேலைக்கு வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து மனிதவள அதிகாரிகள் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கை,சிஐடி பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடந்த தீவிரமாக விசாரணையில் பங்களாதேஷ் எம்.பி ஷாஹிதுல் இஸ்லாம் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சக உதவி துணை செயலாளர் மசின் அல்-ஜரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரின் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் இறுதியாக நேற்று இந்த அதிரடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.