குவைத்தில் வெளிநாட்டினர் நுழைவது தொடர்ந்தும் கடினமாக தான் இருக்கும்;விமான பயணிகளின் எண்ணிக்கை 35-ஆக தொடரும்;நாள் ஒன்றுக்கு 1000 பயணிகள் என்ற முடிவு மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்
குவைத்தில் வெளிநாட்டினர் நுழைவது தொடர்ந்தும் கடினமாக தான் இருக்கும்;விமான பயணிகளின் எண்ணிக்கை 35-ஆக தொடரும்
குவைத்தில் வருகின்ற ஒவ்வொரு விமானத்திலும் பயணிகளின் எண்ணிக்கை 35-ஆகவும், வெளிநாட்டிலிருந்து குவைத் விமான நிலையத்திற்கு வரும் மொத்த பயணிகளின் எண்ணிக்கையின் வரம்பு நாள் ஒன்றுக்கு 1000 என்ற முடிவு மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வெளியிட்ட செய்தியில் முந்தைய அறிவிப்பு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.
குவைத் விமான நிலைய விமானப் போக்குவரத்துப் பிரிவின் இயக்குநரை மேற்கோள் காட்டி உள்ளூர் அரபு நாளிதழ் இது தொடர்பான கூடுதல் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 22-ஆம் தேதி குவைத்துக்கு விமானத்தில் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான நிலையத்திற்கு வரும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் விதித்து விமான அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டனர். வருகின்ற பிப்ரவரி 6 வரை இந்த தடை விதிக்கப்பட்டு, தடை நீங்குவதற்காக 3 நாட்கள் உள்ள நிலையில் மீண்டும் தடை காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குவைத் திரும்புவதற்காக துபாய், துருக்கிய போன்ற நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு காத்திருக்கும் இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பயணிகளை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சவுதி நேற்று இரவு இந்தியா,அமீரகம் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கள் நாட்டில் நுழைய தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.