குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் விமான நிலையம் மூடுவது தொடர்பாக ஆலோசனை;கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து நிலையில்
Image: Kuwait Airport Arrival
குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் விமான நிலையம் மூடுவது தொடர்பாக ஆலோசனை
குவைத்தில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து இன்று கடந்த பல மாதங்களாக இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் விமான நிலையம் மூடுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத் சுகாதரத்துறை அமைச்சகம் மற்றும் விமான நிலைய சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் இடையே வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி தினசரி நாளிதழ் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழுடன் நாட்டிற்கு வரும் பயணிகளும் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் வைரஸ் பாதிப்பு அதிகளவில் கண்டறியப்படும் சூழ்நிலையில் இவற்றைக் கையாள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக தற்போதைய நடைமுறைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும் இதில் அடங்கும்.
அரசின் சுகாதார நெறிமுறைகளை மீறி திருமணம்,விருந்துகள் மற்றும் கூட்டங்கள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்வதால் இதுபோன்ற பாதிப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன. நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமை கவலை அளிக்கிறது. நோய்த்தொற்று வழக்குகள் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து நாட்டின் குடியிருப்பாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்தால், பூட்டுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு திரும்புவோம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.