இந்தியா புறப்பட்ட விமானம் பயணியின் அட்டகாசம் தாங்க முடியாமல் அவசரகால அடிப்படையில் தரையிறங்கியது;சம்பந்தப்பட்ட நபரை அதிகாரிகள் கைது செய்தனர்
Image credit: Air France Official
இந்தியா புறப்பட்ட விமானம் பயணியின் அட்டகாசம் தாங்க முடியாமல் அவசரகால அடிப்படையில் தரையிறங்கியது
பாரிஸிலிருந்து இந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்ட நிலையில் பயணி ஒருவரின் தொந்தரவு தாங்க முடியாததால் அவசர அவசரமாக பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியதாக பல்கேரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. இந்தியரான அந்த பயணி விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே வன்முறையில் ஈடுபட தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மற்ற பயணிகளுடன் சண்டையிட்டு விமான பணிப்பெண்களை தாக்கினார்.
மேலும் விமானியின் இருகையின் காக்பிட் கதவை பலமுறை பலமாக தாக்கி உடைக்க முற்பட்டார் எனவும் பல்கேரிய தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர். பயணியின் இந்த செயல் காரணமாக விமானத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் விமானி சோபியா விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். இதையடுத்து அந்த பயணி விமானத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்ப்பட்டார் மற்றும் விமானத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும். இந்த பயணியின் பெயர் மற்றும் பிற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரை அதிகாரிகள் காவலில் எடுத்து நிலையில் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது, இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.