உலகெங்கும் வேலை செய்ய நீங்கள் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரலாம்; அமைச்சரவை சற்றுமுன் புதிய விசாவை அறிமுகம் செய்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது
Image credit: Official அமைச்சரவை கூட்டம்
உலகெங்கும் வேலை செய்ய நீங்கள் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரலாம்; அமைச்சரவை புதிய விசாவை அறிவித்துள்ளது
உலகில் எங்கும் தொலைத் தூரத்தில் பணிபுரிபவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பு விசாக்களை வழங்குகிறது. இன்று(21/03/21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவைக் கூட்டத்தில், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு அதே வேலையைஅமீரகத்தில் தங்கியிருந்து செய்யும் விதத்தில் சிறப்பு மெய்நிகர் பணி விசாக்களை(virtual work visa) அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக துபாய் அரசு இதே திட்டத்தை அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ நடைமுறையில் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நாட்டினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மெய்நிகர் பணி விசாவிற்கு(virtual work visa) விண்ணப்பிக்கலாம். நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உலகில் எங்கும் இருக்கலாம். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வருகின்ற நிறுவனமாக இருக்க வேண்டியதில்லை. இதன் பொருள் நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்குப் பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கி வேலை செய்யலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷேக் முகமது அவர்களே புதிய விசா முடிவை அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தார்.
மேலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பலமுறை நுழைவு(multiple entry tourist visas) சுற்றுலா விசாக்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த விசா அனைத்து நாடுகளை சேர்ந்த நபர்களுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நிதியை மூலதனமான கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் தனது அனைத்து முடிவுகளையும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கிறது என்று ஷேக் முகமது மேலும் தெரிவித்துள்ளார்.