வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களுக்கான வரிவிதிப்பு தொடர்பாக நிலவிவந்த குழப்பத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்
வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களுக்கான வரிவிதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் விளக்கம்
வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் சம்பளத்திற்கு இந்தியாவின் வருமான வரியிலிருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிலர் வரிவிதிப்பு செய்யபடும் என்ற கோணத்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விவாதித்த நிலையில். வெளிநாட்டினருக்கு இடையில் நிலவிவந்த சந்தேகங்களுக்கு நேற்று(01/04/21) வியாழக்கிழமை அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.மேலும் 2021 ஆண்டின் நிதிச்சட்டத் திருத்தத்தில் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத்,ஓமான் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்கள் மீது புதிய அல்லது கூடுதல் வரி விதிக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதுபோல் வருமான வரிச் சட்டத்தில் 'வரிக்கு பொறுப்பானவர்' என்ற வார்த்தையின் பொதுவான வரையறை சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த திருத்தம் வளைகுடா நாடுகளில் உள்ள வெளிநாட்டினரின் சம்பளம் மற்றும் வருமானத்திற்கான வரியை மாற்றாது. இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக வளைகுடா நாடுகளின் சம்பளத்திற்கான இந்தியாவில் வருமான வரி விலக்கு தொடரும் என்று நிதியமைச்சரின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்துள்ளது.