இந்தியாவில் ஜூன்-1 முதல் உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் ஜூன்-1 முதல் விமான சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது
இந்தியாவில் ஜூன்-1,2021 முதல் உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம்(டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர மற்ற சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்துள்ள நிலையில்,தற்போது உள்நாட்டு விமான சேவைகளில் குறிப்பிட்ட சதவீதம் விமான சேவைகள் அனுமதிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனால் ஜூன்-1,2021 முதல் உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்த்தப்படுவதாக டிஜிசிஏ அறிவித்துள்ளது.புதிய முடிவின்படி உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் வரையில் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 40 நிமிடத்திற்கு உட்பட்ட விமான பயணத்திற்கான போக்குவரத்து கட்டணம், 2,300 ரூபாயில் இருந்து 2,600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 40 நிமிடத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு பயணத்திற்கான குறைந்தபட்ச விமான கட்டணம் 2,900 ரூபாயில் இருந்து 3,300 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது எனவும் டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் விமான கட்டணம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில் 3 மாதங்களில் தற்போது விமான கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் விமான சேவை முடங்கி,வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு உதவவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த புதிய நடவடிக்கையால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.