இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது;புதிய அறிவிப்பு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது
இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கான பயணத்தடை சற்றுமுன் மீண்டும் நீட்டிக்கப்பட்டது
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் நேரடியாக நுழைய விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி தடை ஜூன்-30,2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இன்று(30/05/21) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அதேபோல் 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குள் வருகைதந்த பயணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த வாரம், எமிரேட்ஸ் ஆனது பயண தடையை ஜூன்-14 வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவித்திருந்த நிலையில் இன்று வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, ஜூன்-30 வரை இந்தியாவில் இருந்து எந்த சேவைகளும் இருக்காது.
மேலும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் தடை நீக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த இந்தியர்களுக்கு அமீரகம் வருகை இதன் மூலம் மேலும் தாமதமாகும். கடந்த மாதம் 25-ஆம் தேதி இந்தியாவில் இருந்து விமான சேவைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை செய்தது. மேலும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், தூதர்கள், அரசு சார்ந்த உத்தியோகபூர்வ பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் Golden விசாக்கள் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு பயணத் தடையில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சிறப்பு அனுமதி உள்ள நபர்கள் ஐக்கிய அரபு அமிரேகத்திற்கு வந்தவுடன், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் மற்றும் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கான விமானங்களின் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும். இந்த புதிய அறிவிப்பு காரணமாக விடுமுறைக்கு தாயகம் திரும்பியவர்கள் மற்றும் விசாக்கள் காலாவதி ஆகும் தருவாயில் உள்ளவர்கள் தடை நீட்டிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.