குவைத்தில் கடந்த 14 மாதங்களாக சிக்கித் தவித்த இந்தியாவை சேர்ந்த 16 கப்பல் ஊழியர்கள் தாயகம் திரும்பினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image: விமான நிலையத்தில் 16 பேர்
குவைத்தில் கடந்த 14 மாதங்களாக சிக்கித் தவித்த இந்தியாவை சேர்ந்த 16 கப்பல் ஊழியர்கள் தாயகம் திரும்பினார்கள்
குவைத்தில் கடந்த 14 மாதங்களாக சிக்கித் தவித்த கத்தாரில் இருந்து வந்த கப்பலில் வேலை செய்துவந்த இந்தியாவை சேர்ந்த 16 ஊழியர்களும் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்களின் தொடர்ச்சியான தலையீடு மூலம் தடைகள் நீங்கி இறுதியாக இன்று(04/06/21) வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு திரும்பினார்கள். அவர்கள் அனைவரும் MV-Ula என்ற சரக்குக் கப்பலின் ஊழியர்களாக வேலை செய்து வந்தவர்கள்.
கத்தாரில் இருந்து சரக்குகளுடன் கப்பல் குவைத் துறைமுகத்திற்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பு வந்தடைந்த நிலையில் கப்பலின் உரிமையாளருக்கும், சரக்கின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட சட்ட மோதலைத் தொடர்ந்து அந்த கப்பலின் 16 இந்திய ஊழியர்களும் குவைத்தில் சிக்கினர். இவர்கள் பிரச்சனை தொடர்பாக அறிந்த அதிகாரிகள் அதற்கான தீர்வு காண்பதற்காக எடுத்த பல்வேறுபட்ட முயற்சிகளுக்கு பிறகும் தாயகம் திருப்ப தேவையான சுமூகமான வழிகள் பிறக்கவில்லை. இந்நிலையில் அவர்களை விடுவிக்கக் கோரி இந்தியாவை சேர்ந்த 16 கப்பல் ஊழியர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதை தொடர்ந்து அவர்களை விடுவிப்பதற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் குவைத் வெளியுத்துறை அதிகாரிகள் மற்றும் துறைமுக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக அவர்கள் தாயகம் திரும்புவதில் இருந்த தடை நீங்கியது. இவர்கள் விஷயத்தில் குவைத் மனித உரிமை அமைப்பும் தலையிட்டது குறி்ப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் தாயகம் திரும்புவதற்கான PCR பரிசோதனைகள் மற்றும் பயணச்சீட்டு உள்ளிட்ட அனைத்தையும் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.