குவைத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கான கட்டுப்பாடுகள் நேற்று நடைமுறைக்கு வந்தது;மீறினால் 50,00 தினார் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்
Image : Official Soure
குவைத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கான கட்டுப்பாடுகள்;வெளிநாட்டவர்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்
குவைத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கான கட்டுப்பாடுகள் நேற்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கடந்த பல மாதங்களுக்கு முன்பே தடுப்பூசி எடுப்பதற்காக சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்த போதிலும்,அமைச்சகத்திலிருந்து அதற்கான அழைப்பு கிடைப்பதில் பலருக்கும் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய விதிமுறையின் காரணமாக இதுவரை தடுப்பூசி போடப்படாத வெளிநாட்டவர்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தங்களுடைய வேலைகள் சம்பந்தமாகவும், இல்லாமலும் ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவகங்களில் தினசரி செல்ல வேண்டிய நிலை பல வெளிநாட்டவர்களுக்கு உள்ளது.
ஆனால் நேற்று முதல் இந்த இடங்களுக்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலரையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்ற போதிலும், அந்தந்த நிறுவனத்தின் பெயரில் குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே நுழைய அனுமதி என்ற கட்டுபாடு பலருக்கும் இந்த இடங்களில் நுழைவதற்கு தடையாக அமைகிறது. நாட்டில் தற்போதுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவியுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்களால் இந்த புதிய உத்தரவை செயல்படுத்த முடியவில்லை.
மேலும் விரைவில் தடுப்பூசி ஊழியர்களுக்கு கிடைக்கச் செய்வதே ஒரே தீர்வாக உள்ளது. ஆனால் கடந்த பல மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தவர்களுக்கு கூட தற்போது வரையில் முதல் டோஸ் தடுப்பூசி கூட போடப்படவில்லை. அதேநேரம் சுகாதாரத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டால் வரும் வாரங்களில் தடுப்பூசி போடுவதற்கான குறுஞ்செய்தியை பெறுவீர்கள் என்றே பதில் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் பதிவு செய்தவர்களில் சிலர் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில் மற்ற சிலரோ இதுவரை தடுப்பூசி பெறவில்லை இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. பல மாதங்கள் காத்திருந்த போதிலும், தடுப்பூசி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதில் பலரும் ஏற்கனவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். கூடுதலாக, தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இவர்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
அதுபோல் தடுப்பூசி எடுப்பதற்காக பதிவு செய்தபோதும் அது கிடைக்காததில் எங்கள் தவறு என்ன இருக்கிறது என்றும் அவர்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுபோல் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்காக முன்பதிவு செய்யப்பட்ட பலருக்கும் பலமாதங்கள் ஆன நிலையிலும் தடுப்பூசி எடுப்பதற்கான அறிவிப்பு செய்தி அனுப்பவில்லை. தனியார் மருத்துவதுறையில் தடுப்பூசிகளை வழங்குவதற்காக அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதே இதற்கு தீர்வாக இருக்கும் என்று பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதற்கிடைய வணிக வளாகங்கள், கிளப்புகள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றிற்குள் தடுப்பூசி போடாதவர்கள் நுழைவதைத் தடுக்கும் அமைச்சரவை முடிவை மீறுவதால் 5,000 குவைத் தினார் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில், 6,000 சதுர மீட்டருக்கும் குறைவான(மீன் மற்றும் காய்கறி சந்தைகள்) கூட்டுறவு அங்காடிகள்,இணை சந்தைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் சம்பந்தப்பட்டதுறை உறுதிப்படுத்தியுள்ளது.