குவைத்தில் இருந்து விடுமுறைக்காக தாயகம் சென்ற நிலையில்,தடுப்பூசி மாற்றி எடுத்துக்கொண்ட விரக்தியில் இந்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்
தாயகம் சென்று மீண்டும் குவைத் திரும்ப முடியாத விரத்தியில் இந்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இந்தியாவில் இருந்து குவைத் திரும்ப முடியாத விரக்தியில் இந்தியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எடுத்துக்கொண்ட கோவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசி குவைத்தில் அங்கீகரிக்கப்படாத பட்டியலில் உள்ளதால் அந்த நபர் குவைத் திரும்ப முடியவில்லை என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்தவர் பெயர் சிராஜ் மாப்கர்(வயது-47) என்பது தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை அன்று தனது வீட்டில் வைத்து மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரிழந்த மாப்கர் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தின்,ராய்காட் மாவட்டம், மஹத் பகுதியை சேர்ந்தவர்.
குவைத்தில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் குறிப்பிட்ட துறையில் வேலை செய்து வந்த அவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா திரும்பியிருந்தார். கோவாக்சின் தடுப்பூசியை அவர் எடுத்துக்கொண்ட நிலையில் அந்த தடுப்பூசியுடன் அவர் மீண்டும் குவைத் திரும்ப முடியாது என்று தெரியவந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக பெரும் வருத்தத்தில் இருந்ததாக குடும்ப உறுப்பினர்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். மேலும் குவைத்தின் ஒப்புதல் இல்லாத தடுப்பூசியை அவர் எடுத்ததால் அவருக்கு விசா கிடைக்கவில்லை என்றும், குவைத் திரும்புவதற்காக சிலரிடம் கடன் வாங்கியிருந்தார் என்றும் குடும்பத்தினர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
குவைத் அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இறுதி பட்டியல் இதுவரையில் வெளியிடவில்லை, இந்தியாவில் இருந்து பயணிகள் நேரடியாக நுழைய விமான நிலையம் திறப்பதற்கு ஆகஸ்டு-1 வரையில் நேரம் உள்ளது. மேலும் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் பல மாற்றங்கள் வரலாம் அதற்குள் எதற்கு இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் தீர விசாரித்து பிரச்சனைக்கு முடிவு காண்பதற்கான முயற்சி செய்யுங்கள்.