துபாயில் கொரோனா காரணமாக தாயை இழந்து தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த குழந்தை விமானம் மூலம் திருச்சி அழைத்து வரப்பட்டு தந்தையிடம் பத்திரமாக ஒப்படைப்பு
Image : உயிரிழந்த பாரதி மற்றும் குழந்தை கணவர்
துபாயில் தாயை இழந்து தவித்த தமிழக குழந்தை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு தந்தையிடம் ஒப்படைப்பு
துபாயில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது 10 மாத கைக்குழந்தை விமானத்தில் அழைத்து வரப்பட்டு தமிழகத்தில் உள்ள தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரியைச் சேர்ந்த வேலன்(வயது-38) மற்றும் பாரதி(வயது-36) ஆகியோருக்கு கடந்த 2008 யில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 3 ஆண் குழந்தைகள் இருந்த நிலையில் முதல் குழந்தை நுரையீரல் கோளாறு காரணமாக உயிரிழந்தது.
மேலும் வேலனுக்கும் சரியான வேலை அமையாத நிலையில் குடும்ப வறுமை காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 மாதமேயான தன்னுடைய மூன்றாவது கைக்குழந்தை தேவேஷ் உடன் பாரதி துபாயில் வீட்டு வேலைக்காக சென்றார். கடந்த ஒரு மாதமாக வீட்டு வேலை செய்து வந்த பாரதி மே-10 வாக்கில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்றவர் அவர் மே-29 அன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். மேலும் கொரோனாவால் உயிரிழக்கும் உடல் விமானத்தில் எடுத்துவர முடியாது என்பதால் சர்வதேச கொரோனா விதிமுறைக்கு ஏற்ப அங்கேயே பாரதிக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கைக்குழந்தையான தேவேஷ் பாரதியுடன் பணி புரிந்து வந்த மற்ற பெண்கள் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் தாயின்றி கைக்குழந்தை தேவேஷ் துபாயில் தவித்து வருகின்றன தகவலறிந்த துபாய் தி.மு.க அமைப்பாளர் எஸ்.எஸ்.முகமது மீரான் அங்குள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் அளித்துள்ளார். மேலும் தமிழக முதல்வரின் கவனத்திற்கும் இது தொடர்பான செய்தியை கொண்டு சென்றார். இதையடுத்து துரிதமான நடவடிக்கைகளுக்கு பிறகு கைக்குழந்தை தேவேஷை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இண்டிகோ விமானம் மூலம் துபாயிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து தந்தை வேலவனிடம் தேவேஷ் ஒப்படைக்கப்பட்டார். விமான நிலையத்தில் காத்திருந்த வேலன்,குழந்தை வெளியே வரவும் தரையில் மண்டியிட்டு தன் குழந்தையை கட்டியணைத்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்.