இந்தியா யுஏஇ இடையேயான விமான சேவை எப்போது தொடங்கும் என்ற பயணியின் கேள்விக்கு எமிரேட்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது
Image : Emirates Airlines
இந்தியா-துபாய் இடையேயான விமான சேவை தொடங்க சரியான நெறிமுறைக்காக காத்திருப்பதாக எமிரேட்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது
புதிய நிபந்தனைகளுடன் நேற்று(23/06/21) முதல் துபாய்க்கு இந்தியாவில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கும் என்று எமிரேட்ஸ் முன்பு அறிவித்திருந்தது. ஆனால் பயணிகளை அழைத்து வருவதில் இருந்த சில நிபந்தனைகளில் தெளிவு இல்லாத நிலையில் சேவைகள் கடைசி கட்டத்தில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் இந்தியா-யுஏஇ விமான சேவை எப்போது மீண்டும் தொடங்கும் என்ற பயணி ஒருவரின் கேள்விக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பதிலளித்துள்ளது. அதில் துபாய் விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கான சரியான நெறிமுறைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. துபாய் பயணம் குறித்த கேள்விக்கு எமிரேட்ஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறாக பதில் அளித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஜூலை 6-ஆம் தேதி வரை இந்த சேவை இடைநிறுத்தப்படுகிறது என்றும்,புதிய பயணங்கள் தொடர்பான துபாய் அரசு சார்பில் தங்களுக்கு புதிய அறிவிப்பு எதாவது கிடைத்தால் அதை தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும் எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. இதற்கிடையே நேற்றைய தினம் ஏர் இந்தியா பயணி ஒருவரின் கேள்விக்கு பதிலாக ஜூலை 6-ஆம் தேதி வரையில் விமான சேவை தடை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.