குவைத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஞாயிறு முதல் முக்கியமான இடங்களில் நுழைய தடை என்பதால் இன்று கூட்டம் அலைமோதியது
குவைத்தில் ஞாயிறு முதல் முக்கியமான இடங்களில் நுழைய தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு தடை
குவைத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு வருகின்ற 27/06/21 ஞாயிற்றுக்கிழமை முதல் முக்கியமான வணிக வளாகங்களில் அனுமதி தடை அமல்படுத்தப்பட்டு வருவதால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மால்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இதுவரையில் இல்லாத வகையில் கடுமையான நெரிசல் காணமுடிந்தது. நாட்டின் மிகப்பெரிய மாலான அவென்யூஸில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில் நகராட்சி அதிகாரிகள் முக்கியமான நுழைவு வாயில்களை மூடினர்.அதேபோல் குவைத்தில் உள்ள பிற மால்கள் மற்றும் முக்கியமான பல ஹைப்பர் மார்க்கெட்டுகளில் நெரிசலாக மக்கள் காணப்பட்டனர்.மேலும் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு உள்ள முதல் வெள்ளிக்கிழமை என்றதும் மால்களில் பெரும் நெரிசல் ஏற்பட காரணமாக அமைந்தது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து ஜூன்-27 ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை மறுநாள் முதல் தடுப்பூசி போடாதவர்கள் பெரிய வணிக வளாகங்கள் ,உணவகங்கள், கஃபேக்கள் சலூன் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் நுழைய தடை அமலுக்கு வருகின்றன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் முக்கிய மால்களின் நுழைவாயில்களில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதுபோல ஞாயிற்றுக்கிழமை முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நபர்கள் மட்டுமே 6,000 சதுர மீட்டருக்கும் அதிகமான உள்ள வணிக வளாகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள், அதுபோல் உணவகங்கள், கஃபேக்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சாலூன் உள்ளிட்ட இடங்களிலும் நுழைய முடியும், எனவே தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும்போது சிவில் ஐடி துறை வெளியிட்டுள்ள "My Kuwait ID" என்ற செயலி அல்லது சுகாதார அமைச்சகத்தின் "Immune App" செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்து, தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரமாக இவற்றில் ஏதேனும் ஒன்றை இந்த இடங்களில் உள்ள அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.மேலும் உங்கள் செயலியில் பச்சை அல்லது மஞ்சள் அடையாளம் தெரியும் நபர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட இடங்களில் நுழைய முடியும்