அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரின் விடுதலைக்கு இரத்த பணமாக 1 கோடி கொடுத்தார் தொழில் அதிபர் யூசுப் அலி
Image: யூசுப் அலி மற்றும் கிருஷ்ணன்
அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரின் விடுதலைக்கு 1 கோடி கொடுத்தார் யூசுப் அலி
அமீரகத்தில்,அபுதாபி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு வாழ்க்கையில் அனைத்து நம்பிக்கையையும் இழந்த நிலையில் இந்தியருக்கு மறுவாழ்வு அளித்தார் இந்தியரான லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி அவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, அபுதாபியின் முஸப்பையில் வைத்து நடந்த கார் விபத்தில் ஒரு சூடான் நாட்டு சிறுவன் உயிரிழந்த வழக்கில், யூசுப் அலி அவர்களின் தலையீட்டால் கேரளா மாநிலம், திருச்சூர் புத்தேஞ்சிரா சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன்(வயது-45) என்பவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
விபத்தில் இறந்த குழந்தையின் குடும்பத்தினருடன் யூசுப் அலி அவர்கள் பலமுறை நடத்திய பேச்சுவார்த்தைகளின் இறுதியில் 5 லட்சம் திர்ஹாம்(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1 கோடி) Blood Money (ரத்த பணம்) செலுத்தியதன் பலனாக நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்துள்ளது. இந்த விபத்து செப்டம்பர்-7,2012 அன்று அபுதாபியில் நடந்தது. வேலைக்காக கிருஷ்ணன் முஸப்பாவுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் அவர சென்ற கார் மோதியதில் ஒரு சூடான் சிறுவன் உயிரிழந்தார். இதை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பெக்ஸ் கிருஷ்ணன் மீது அபுதாபி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சி.சி.டி.வி காட்சிகள்,நேரில் பார்த்த நபர்களின் சாட்சிகளின் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் விளையாடி கொண்டிருந்த குழந்தையின் மீது காரை ஏற்றிய விபத்தில் குழந்தை இறந்தது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் பல மாத விசாரணைக்கு பிறகு 2013-ல் ஐக்கிய அரபு எமிரேட் உச்ச நீதிமன்றம் கிருஷ்ணனுக்கு மரண தண்டனை விதித்தது.
அபுதாபியின் அல் வாட்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெக்ஸ் விடுதலையைப் பெற குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் பலவும் தோல்வியடைந்தது. அனைத்து நம்பிக்கையும் இழந்த நேரத்தில், குடும்பத்தினர் எம்.ஏ.யூசுப் அலியை உறவினர் ஒருவரின் உதவி மூலம் விடுவிக்க தயவு கூர்ந்து தலையிடுமாறு கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக யூசுப் அலி, குழந்தையின் குடும்பத்தினருடன் பலமுறை பேச்சுவார்த்தை மேற்கொண்டார், மேலும் அவர்களுக்கு நடந்த விஷயங்கள் மற்றும் சிறையிலுள்ள நபரின் குடும்ப சூழ்நிலை உள்ளிட்டவை சொல்லி அவர்களை சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சியில் வெற்றியும் கண்டார். ஒரு கட்டத்தில், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தை சூடானில் இருந்து அபுதாபிக்கு அழைத்துவந்து தங்க வைக்க வேண்டிய நிலை வரையில் ஏற்பட்டது.
பல ஆண்டுகளாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும் சந்திப்புகளுக்கு பிறகு மன்னிப்பு வழங்குவதாக சிறுவனின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெக்ஸின் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது. யூசுப் அலி அவர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் 5 லட்சம் திர்ஹாம் இழப்பீடாக நீதிமன்றத்தில் செலுத்தினார். இதன் மூலம் பெக்ஸ் கிருஷ்ணன் சட்ட நடைமுறைகளை முடித்து மறுநாள் வீடு திரும்புவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இது தனது இரண்டாவது பிறப்பு என்று பெக்ஸ் கிருஷ்ணன் இந்திய தூதரக அதிகாரிகள் அல் வாட்பா சிறையில் அவரை சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அதிகாரிகளிடம் அவர் குடும்பத்தை மீண்டும் பார்க்க முடியும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறினார்.
மேலும் அவர் பிறந்த மண்ணுக்கு திரும்ப முடியும் என்று கடுகளவு கூட நம்பிக்கை இல்லாமல் இருந்த நிலையில்,யூசுப் அலி அவர்கள் கடவுளை போல் உதவினார் எனவும், என்னை மீண்டும் மறுஜென்மம் எடுக்க வைத்த யூசுப் அலி அவர்களை நேரில் காண விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார். பெக்ஸ் கிருஷ்ணன் பல வருட சிறை வாசத்திற்கு பிறகு வீட்டிற்கு செல்ல தயாராகி வருகிறார். இது குறித்து யூசுப் அலி அவர்கள்,மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபரின் உயிரைத் திருப்பித் தர முடிந்ததற்காக எல்லாம் வல்ல கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். கிருஷ்ணணுக்கும் அவரது குடும்பத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை கிடைக்க வாழ்த்துகிறேன் என்றும் அவர் மேலும் கூறினார்.