இலங்கை ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருள் இல்லாமல் அவசர அவசரமாக தரையிறங்கிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது
இலங்கை ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருள் இல்லாமல் அவசர அவசரமாக தரையிறங்கியது
இலங்கை ஏர்வேஸ் விமானம் UL504 திருவனந்தபுரத்தில் எரிபொருள் காலியான நிலையில் அவசர அவசரமாக தரையிறங்கியது என்றும், இந்த விமானம் லண்டனில் இருந்து கொழும்பு விமான நிலையம் நோக்கி இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை முடித்துக் கொண்டு திரும்பிய கிரிக்கெட் வீரர்களுடன் பறந்த நிலையில் இவ்வாறு தரையிறங்கியது என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்காக விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு துறைக்கு அவசர செய்தி அனுப்பினார். முதலில் ஓமானின் மஸ்கட்டில் விமானத்தை தரையிறக்க முயற்சிகள் செய்தனர்,ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கு விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
சூழ்நிலையை புரிந்துகொண்ட விமான நிலைய அதிகாரிகளின் உத்தரவின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் உள்ளிட்ட அனைவரும் அடுத்த சில நிமிடங்களில் ஓடுபாதையில் அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் தயாராக நின்றனர். இதன் பின்னர் விமானத்திற்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து விமானம் நேற்று(06/07/21) பிற்பகல் சரியாக 1.32 மணிக்கு ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது. இந்நிலையில் இது தொடர்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து எரிபொருள் நிரப்பிய பின்னர், பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் விமானம் கொழும்புக்கு பறந்தது. தரையிறங்குவதற்கு அனுமதி வழங்க தாமதமாகி இருந்தால் ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கும். பைலட் அனுப்பிய அவசர செய்தியின் அடிப்படையில் திருவனந்தபுர விமான நிலைய போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.