குவைத்தில் கொல்லப்பட்ட இந்திய டெலிவரி டிரைவர் பாஷா ஷேக்கின் குடும்பத்திற்காக பிரபல தினசரி பத்திரிகை நிதி திரட்டுகிறது
Image credit: அல்-கபாஸ் பத்திரிகை
குவைத்தில் கொலை செய்யப்பட்ட இந்தியர் குடும்பத்திற்காக பிரபல தினசரி பத்திரிகை நிதி திரட்டுகிறது
குவைத்தில் மிகவும் பிரபலமான முன்னணி தினசரி நாளிதழான அல்-கபாஸ், கொல்லப்பட்ட இந்திய டெலிவரி டிரைவர் பாஷா ஷேக்கின் குடும்பத்திற்கு உதவுவதற்காக நன்கொடை சேகரிக்கின்றனர். இதற்கான பணிகள் இன்று(13/07/21) முதல் தொடங்கும் என்றும் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நிதி திரட்ட சட்டப்பூர்வ அனுமதி கோரி நாட்டின் சமூக நிதி அமைச்சகத்தின்,சமூக அபிவிருத்தி பரிவின் செயலாளர் ஹனால் ஹஜ்ரிக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வன்முறை மற்றும் குற்றங்கள் நமது சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்ற தலைப்பில் கீழ், நாளிதழின் முதல் பக்கத்தில் கடந்த 3 மாதங்களில் குவைத்தில் வெவ்வேறான சம்பவங்களில் கொல்லப்பட்ட 2 குவைத் நாட்டினரின் புகைபடங்களுடன் பாஷாவின் படத்தையும் சேர்த்து செய்தித்தாள் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியரான பாஷா ஷேக்(வயது-41) நேற்று முன்தினம் அபு ஃபத்தீராவில் உள்ள குவைத் குடிமகன் ஒருவரின் வீட்டில் வைத்து அதிகாலை படுகொலை செய்யப்பட்டார். அவர் Q7 என்ற தனியார் மின்னணு நிறுவனத்தின் Delivery பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
ஆர்டரின் பெயரில் 150 தினார் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்க பாஷா அபு ஃபத்தீராவில் உள்ள குவைத் குடிமகனின் வீட்டிற்கு சென்றார். பொருட்களைப் பெற்ற பின்னர் பணம் கொடுக்க மறுத்த குவைத்தியின் மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இந்த கொலை நிகழ்ந்துள்ளது. பணம் வழங்காமல் தன்னால் திரும்ப முடியாது என்று கூறிய பாஷாவை குற்றம் சாட்டப்பட்டவர் இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கினான். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தலைமறைவாக இருந்த 26- வயதான குற்றவாளியை இரகசிய பிரிவு அதிகாரிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து கைது செய்தனர்.