கத்தார் பயண நிபந்தனைகளை மீண்டும் திருத்தியுள்ளது;புதிய அறிவிப்பு ஆகஸ்டு-2,2021 திங்கட்கிழமை முதல் நடைமுறையில் வருகிறது
Image credit: Qatar Airways
கத்தார் பயண நிபந்தனைகளை திருத்தியுள்ளது;புதிய அறிவிப்பு ஆகஸ்டு-2 முதல் நடைமுறையில் வருகிறது
கத்தார் சுகாதாரத்துறை தங்கள் நாட்டிற்கு வருகின்ற பயணிகளுக்கு புதிய பயண விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி வருகின்ற திங்கள்கிழமை அதாவது ஆகஸ்ட் 2,2021 முதல் புதிய அறிவிப்பு அமலுக்கு வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கத்தார் வரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் உள்ளிட்டவை கட்டாயமாகும். கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பான திருத்தப்பட்ட புதிய அறிவிப்பை இன்று(30/07/21) மாலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்குப் பொருந்தும் புதிய விதிமுறைகள் பின்வருமாறு:
1. கத்தார் நாட்டின் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள், கத்தாரின் பொது சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை கத்தாரில் இருந்து எடுத்திருந்தால் அல்லது ஏற்கனவே கத்தார் நாட்டில் இருந்து கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவராக இருந்தாலும் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இரண்டு நாட்கள் தங்க வேண்டும். இரண்டாவது நாளில் ஆர்டி பி.சி.ஆர் பரிசோதனை செய்து அதன் முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால், தனிமைப்படுத்தல் முடித்து நீங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.
2. கத்தார் நாட்டின் குடியிருப்பு விசா வைத்திருப்பவர் கத்தாரின் வெளியில் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தாலோ அல்லது நீங்கள் தடுப்பூசி எடுக்காத நபராக இருந்தாலோ, இவை இரண்டும் இல்லாமல் கத்தாருக்கு வெளியே வைத்து கோவிட் மூலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவராக இருந்தாலும் 10 நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்.
3. விசிட்(குடும்பம், சுற்றுலா, தொழில்) இதில் எந்த பிரிவினராக இருந்தால் கத்தார் நாட்டின் வெளியில் இருந்து கத்தார் சுகாதரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட நபராக இருந்தாலும் கூட அவர்கள் 10 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
4. மேலும் விசிட்(குடும்பம், சுற்றுலா, வேலை) விசாக்களில் முன்று பிரிவினரும் கத்தாரில் நுழைய வேண்டும் என்றால் கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். எடுக்காத நபராக இருந்தால் கத்தாரில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் கத்தார் நாட்டிற்கு பயணத்திற்குத் தயாராகி வருபவர்கள் கத்தார் பொது சுகாதரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் புறப்படுவதற்கு முன் பார்த்து சமீபத்திய வழிகாட்டுதல்களைப் புரிந்து கொண்டு மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.