குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விசா புதுப்பித்தல் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விசா புதுப்பித்தல் தொடர்பான நற்செய்தி விரைவில் வெளியாகலாம்
குவைத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தகுதி இல்லாத வெளிநாட்டினரின் விசாக்களை அதிக கட்டணம் இல்லாமல் புதுப்பித்தல் செய்து வழங்கும் முடிவு விரைவில் வெளியாகும் என்று தினசரி நாளிதழ் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்க்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சரும்,மனிதவள மேம்பாட்டு இயக்குநர்கள் குழுவின் தலைவருமான அப்துல்லா சல்மான் அவர்கள் சமர்ப்பித்த திட்டம் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இத்தகைய 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினருக்கான குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை(Work Visa) ஆண்டுக்கு 2000 தினார் கட்டணமும் மற்றும் சுகாதார காப்பீட்டு தொகையாக 500 தினார் கட்டணத்துடன் புதுப்பிக்க முன்னர் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதிக கட்டணம் வசூலிக்காமல், சிறப்பு காப்பீட்டு கட்டணத்தை மட்டும் விதிப்பது குறித்து பரிசீலிக்க திட்டம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால சேவைக்குப் பிறகு முதியவர்கள் என்ற காரணத்திற்காக வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்றும் அந்த முன்மொழிவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டு ஜனவரி-1,2021 முதல் உயர்நிலைப் பள்ளி கல்வித் தகுதி இல்லாத 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினருக்கான குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை(Work Visa) புதுப்பிக்க தொழில்துறை அமைக்கம் தடை விதித்து உத்தரவை வெளியிட்டது. இருந்தாலும் 60-வயதிற்கு மேற்பட்ட 157 வெளிநாட்டினரின் விசாக்கள் புதிய உத்தரவுகளை மீறி புதுப்பித்து வழங்கியது கண்டறியப்பட்ட நிலையில், அதில் தொடர்புடைய 35 அதிகாரிகள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இவற்றில் 4 பேருக்கு 3 வருடங்களுக்கும், 27 பேருக்கு இரண்டு வருடங்களுக்கும், 126 பேருக்கு ஒரு வருடத்திற்கு விசா புதுப்பித்தல் செய்து வழங்கியது கண்டறியப்பட்டுள்ளன. புதுப்பித்தல் செய்து வழங்கப்பட்ட நபர்களில் சிலர் 80 முதல் 90 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.