குவைத்தில் சுகாதார நிலைமை மோசமடைந்து வருகின்ற நிலையில்,முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : KuwaitCity
குவைத்தில் சுகாதார நிலைமை மோசமடைகிறது;முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன
குவைத்தில் கடந்த சில நாட்களாக சுகாதார நிலைமை ஆபத்தான முறையில் மோசமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும், மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. அதுபோல் ஒன்று அல்லது இரண்டு டோஸ் அளவு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களும் மரணமடையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அதிகாரிகள் கவலையுடன் உன்னிப்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அதுபோல் நாட்டின் முக்கியமான மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் அதிகபட்ச திறனை எட்டுகின்றன(அதாவது பெரும்பாலான படுக்கைகள் நிரம்பியுள்ளது). தற்போது குவைத்தின் ஜாபீர் மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 160 நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இதைக் கருத்தில் கொண்டு, மறு ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை நாட்டில் விதிக்க சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் குவைத்தில் முதல் முறையாக கொரோனா கண்டறியப்பட்ட பிறகு தற்போதுதான் நாடு மிகவும் ஆபத்தான நிலையை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இதன் காரணமான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதோடு, கூடுதலாக கொரோனா பாதிப்பை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற நாடுகளின் உதவியை நாடுவது, தனியார் மருத்துவமனைகளின் உதவியை நாடுவது மற்றும் அரசு மருத்துவமனைகளில் அதிகமான கோவிட் வார்டுகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்று தெரியவந்துள்ளது.