வெளிநாடு செல்வோருக்கு பயிற்சி மற்றும் காப்பீடு உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்க திட்டம் என்று அமைச்சர் மஸ்தான் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்
Image credit: Official Soure
வெளிநாடு செல்வோருக்கு பயிற்சி,காப்பீடு உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்க திட்டம் என்று அமைச்சர் மஸ்தான் தகவல்
தமிழக அரசின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று(03/07/21) வெள்ளிக்கிழமை அன்று சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் மஸ்தான் கூறியதாவது:
வகுப்பு வாரிய தனது துறையின் நிர்வாகத்தை 3 மாதங்களுக்குள் சீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாப்பது குறித்து கூட்டத்தில் பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்வோர் முதலில் தமிழகத்தில் அதற்கான விபரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் இதற்காக பதிவேடு தொடங்கி, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக செல்பவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக, வெளிநாடு செல்வதற்கான காரணம், எந்த நிறுவனம் போன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று சேகரித்து வைக்கவும், வெளிநாடு செல்பவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களை அனுப்பும் முகவர்கள், பணி செய்ய உள்ள நிறுவனங்கள் குறித்த உண்மைத்தன்மையை அரசே அறிந்து, அவர்களை அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று சிரமத்துடன் திரும்புவோர் தொழில் தொடங்க 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது, 60-வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூபாய் 5000 ஓய்வூதியம் தரலாம் என்றும் கூறியுள்ளனர். இவை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதற்கான வாரியம் அமைத்து திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இக்கூட்டத்தில்,மறுவாழ்வு துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரக இயக்குநர் திருமதி.ஜெஸிந்தா லாசரஸ், இ.ஆ.ப., K.ரமேஷ், துணை இயக்குனர், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் M.H.ஜவாஹிருல்லா,கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய தலைவர் திரு.பொன்குமார், சகோதரி.வளர்மதி, அருட்தந்தை வேளாண்கன்னி,(F.J) அருட்தந்தை.பிரபு,(F.J), டாக்டர். பெர்னார்டு, டாக்டர் D.பாலமுருகன், திரு.P.ரூப பாலன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.