இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைய அனுமதி
Image : Dubai Airport
அமீரத்தில் நுழைய புதிதாக சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவுக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது
இந்தியா, இலங்கை உள்ளிட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் இனிமுதல் நேரடியாக நுழைய முடியும். உலக சுகாதரத்துறை அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி முடித்தவர்கள் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம்(ICA), தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவு ஆகஸ்ட்-30,2021 நாளை(திங்கள்கிழமை)முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதிதாக சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவுக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதேபோல் முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைய பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலுள்ள நபர்களின் விசிட் விசாக்களுக்கு இந்த புதிய அறிவிப்பு பொருந்தும் என்று அதிகாரிகள் நேற்று(28/08/21) சனிக்கிழமை தெரிவித்தனர். இதன் மூலம், இந்தியாவில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். விசிட் விசாவில் நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் விமான நிலையத்தில் வந்தவுடன் விரைவான பிசிஆர்(Rapid-Test) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை ICA இணையதளம் மற்றும் அல் ஹுசைன் ஆப் மூலம் பதிவு செய்யலாம். தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள நிபந்தனைகள் அனைத்தும் மாறாமல் அப்படியே நடைமுறையில் உள்ளது. அதை கடைபிடித்து மட்டுமே அமீரகத்தில் நுழைய முடியும்.