குவைத்தில் வெளிநாட்டினர் சொந்த பெயரில் பல வாகனங்களை பதிவு செய்வதற்கு கட்டுப்பாடுகள் வருகின்றன
Image : Kuwait Road
குவைத்தில் போக்குவரத்து சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால் கட்டுபாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் வெளிநாட்டவர்கள் சொந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்வதை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தற்போது ஒரு நபரின் பெயரில் பதிவு செய்யக்கூடிய அதிகபட்ச வாகனங்களுக்கு வரம்புகள் இல்லை. இதன் காரணமாக போக்குவரத்து சட்டத்தை தவறாக பயன்படுத்தி 50 கார்கள் வரையில் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் குவைத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் ஒரு பிரிவினர் இதனையே ஒரு தொழிலாக வைத்து வணிக வியாபாரம் செய்வதற்காக உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வாகனங்களை வாங்கி விற்பனை செய்கின்றனர் என்பதும் தெளிவாகியுள்ளன.
எனவே இப்படிப்பட்ட உரிமம் பெறுவதற்காக செலுத்த வேண்டிய கட்டண வகையில் அரசாங்கத்திற்கு மில்லியன் கணக்கான தினார்கள் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே அமைச்சகம், வெளிநாட்டினர் தனது சொந்த பெயரில் பல வாகனங்களை பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு தயாராகி வருகிறது. இதுபோல் பல கார்களை தங்களின் பெயரில் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் மற்றொரு பிரிவினர் சட்டவிரோதமாக வாடகை கார் வியாபாரம் செய்து வருகின்றனர் என்றும் அமைச்சகம் கண்டறிந்துள்ளது.