அமீரகத்தில் மூன்று திர்ஹாத்திற்கு உணவு, இந்திய பெண்மணியின் இந்த மனிதாபிமான செயலை வாழ்த்தியே ஆக வேண்டும்
Image : சாதனை பெண்மணி ஆயிஷா
இந்தியாவில் இருந்து அமீரகம் சென்று சாதித்து காட்டிய இந்திய பெண்மணியின் நிஜக்கதை இது
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய ஆயிஷா கான் இப்போது சமையல்காரராக மாறியுள்ளார். வேலைப்பழு அதிகமாக இருந்ததால் அவர் அந்த வேலையை விட்டுவிட்டார். பின்னர் தானாக எதாவது செய்து சாதிக்க விரும்பிய ஆயிஷா இன்று ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பசியாறும் அளவுக்கு உணவு தயார் செய்து வழங்கி வருகிறார். நீங்கள் அஜ்மானில் உள்ள உணவு ஏடிஎம் -க்குச் சென்றால், பிரியாணி உட்பட எந்த உணவிற்கும் மூன்று திர்ஹம் மட்டுமே செலுத்தினால் போதும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
ஆயிஷா பற்றி கூற வேண்டுமானால், இவர் இந்தியாவின் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் ஆவார், இவரே இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிக குறைந்த விலையில் உணவு வழங்கி அனைவரும் பாராட்டும் விதமாக இந்த சேவையினை செய்து வருகிறார். நாட்டில் உள்ள 80 சதவீதம் அளவிலான சாதாரண தொழிலாளர்களுக்கு 2024 குள் முடிந்தால் மூன்று திர்ஹாம்களுக்கும் குறைவான விலையில் உணவை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்த தொழிலை துவங்க பல்வேறுபட்ட பிரச்சனைகளை அவர் சந்தித்தார். தாயகத்தில் உள்ள அவருடைய வீடு உள்ளிட்டவை விற்று அதில் வந்த பணத்தை முதலீடாக கொண்டு 15 தொழிலாளர்களுடன் இதை துவங்கியுள்ளார்.
அதேபோல் உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் இதற்காக அனுமதி பெறுவதிலும் பல்வேறு பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டியது இருந்தது. இதை அனைத்தையும் தாண்டியே இவர் இந்த சேவையினை செய்து வருகின்றார். மேலும் இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் கார்டை ரீசார்ஜ் செய்து உணவு பெற்று கொள்ளும் வழிமுறையும் அறிமுகம் செய்துள்ளார். மூன்று வேளை உணவுக்கு 9 திர்ஹாம் மட்டுமே என்பது அமீரகத்தை பொறுத்தவரைவில் மிகவும் குறைந்த கட்டணமாகும். பசியுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குதல் என்பதே இந்த ஏடிஎம் உணவகத்தின் முதன்மையான முயற்சி ஆகும். இவரை போன்று இன்னும் பல ஆயிஷாகள் முன்வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.