குவைத்தில் நேரடியாக நுழைய விமான பயணச்சீட்டு கட்டணம் வரும் நாட்களில் குறையும்; முதல் ஏர் இந்தியா விமானம் புதன்கிழமை வருகிறது
Image : குவைத் இந்திய தூதர்
சில நாட்கள் காத்திருந்தால் குவைத்திற்கான நேரடி பயணச்சீட்டு கட்டணம் குறையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் கடந்த(02/09/21) வியாழக்கிழமை முதல் இந்தியா, எகிப்து உள்ளிட்ட சில சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் நேரடியாக நுழைய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பயணிகள் அன்றைய தினம் முதல் நாட்டில் நுழைந்து வருகி்ன்றனர். மேலும் மிகவும் குறைந்த அளவிலான சேவைகளை மட்டுமே ஜசீரா எயர்வேஸ் இயக்குவதால் வருகை பயணச்சீட்டு கட்டணமாக மட்டுமே பல லட்சங்கள் செலவு செய்து விமான பயணச்சீட்டு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு இந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து நாளை மறுநாள் புதன்கிழமை(08/09/21) முதல் ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் குவைத்திற்கு வரும் என்று இந்திய தூதர் சிபி ஜார்ஜ் இன்று தெரிவித்துள்ளார்.
இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில் வரும் நாட்களில் ஏர் இந்தியா மற்றும் இன்டிகோ விமானங்களின் சேவைகளை துவங்குவதால் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் குறைய துவங்கும் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து குவைத் அரசு விமான நிறுவனமான ஜசீரா எர்வேஸ் மட்டுமே பயணிகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அழைத்து வருவதால் விமான பயணச்சீட்டு கட்டணம் லட்சங்களை கடந்து வசூலிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த மகிழ்ச்சியான புதிய செய்தியை அவர் இன்று மாலையில் வெளியிட்டுள்ளார்.