குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கு தூதரகங்கள் உதவியுடன் தடுப்பூசி வழங்க அமைச்சகம் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது
Image : Kuwait MOH
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கும் தடுப்பூசி வழங்க சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிடுகிறது
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. நாடு ஒவ்வொரு நாளும் முழுமையான சமூக பாதுகாப்பு என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகின்ற சூழ்நிலையிலும், சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடாமல் உள்ளதால், நாட்டில் மீண்டும் நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் கவலை கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளை செயல்படுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாட்டில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் இணையதள பதிவு நடைமுறை மூலம் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது நடைமுறை படுத்த முடியாத காரியமாக கருதப்படுகிறது. சட்ட நடவடிக்கைக்கு பயந்து யாரும் முன் வரமாட்டார்கள் என்பதே இதற்கு முக்கிய தடையாக உள்ளது. இந்த சூழலில், அந்தந்த நாடுகளின் தூதரகங்களின் உதவியுடன், தூதரக வளாகத்தைப் பயன்படுத்தி இவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.