குவைத்தில் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை மற்றொருவர் பெயருக்கு மாற்ற புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
Image : KuwaitCity Road
பணமோசடி நடவடிக்கை வாகனங்களை மாற்றி வழங்குவதற்காக புதிய நிபந்தனையை அதிகாரி வெளியிட்டுள்ளார்
குவைத்தில் வாகனங்களின் உரிமையை மற்றொரு நபரின் பெயருக்கு மாற்றுவதற்கான புதிய நிபந்தனையை உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது. நாட்டின் போக்குவரத்து துறை உதவி துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜமால் அல்-சயாக் அவர்கள் இது தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, முதலில் வாகனம் வாங்கிய நபர் அந்த வாகனத்திற்கான உரிமைகள் தொடர்பான ஆவணங்களை இரண்டாவதாக வாகனத்தை விலைக்கு வாங்குகின்ற நபரின் பெயருக்கு மாற்றுவதற்காக விண்ணப்பிக்கின்ற நேரத்தில் வாகனத்தை விற்பனை செய்ததற்காக வழங்கப்பட்ட பணப் பரிவர்த்தனை(பணம் வழங்கியது) தொடர்பான ஆவணங்களின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவாக கூற வேண்டும் என்றால் விண்ணப்பத்துடன் காசோலையின் நகல், பணம் பெற்றதற்கான ரசீது அல்லது தொகையை வங்கிக்கு செலுத்தியதற்கான ஆவணத்தின் நகல் இதில் எதாவது ஒன்று வாகனத்தின் உரிமை தொடர்பான ஆவணங்களை மாற்றி வழங்குவதற்காக விண்ணப்பிக்கின்ற நேரத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டும். பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் சரிபார்த்து உறுதி செய்கின்ற வரையில் வாகனத்தின் எந்தவொரு உரிமையும் புதிதாக வாகனத்தை வாங்குகின்ற நபரின் பெயரில் மாற்றப்பட வேண்டியதில்லை என்றும் அந்த அறிவிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் விலையுயர்ந்த ஆடம்பர வாகனங்கள் விற்பனை மூலம் கருப்புப்பணம் மாற்றுதல் உள்ளிட்ட பணமோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்த நிலையில் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையாக இந்த புதிய நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.