சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளுடன் 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது
Image Credit: Saudi Airlines
சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் 5 நாட்களாக குறைத்து சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் நேற்று புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டவர்கள்(தொழிலாளர்கள்) மற்றும் விசிட் விசாவில் வருகின்ற நபர்களுக்கும் தனிமைப்படுத்தல் தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் நேற்று(13/09/21) அறிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி எடுக்காத நபர்களோ அல்லது சவுதி அங்கீகாரம் பெற்ற கோவிட் தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே எடுத்தவர்களோ சவுதி அரேபியாவுக்கு வந்தால் அவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் எதிர்மறையான(Negative) சான்றிதழை பயணத்தின் போது உடன் எடுத்துவர வேண்டும்.
சவுதி அரேபியாவில் நீங்கள் நுழைந்த பிறகு ஐந்து நாட்கள் மட்டும் நிறுவன தனிமைப்படுத்தல் செய்தால் போதுமானது, ஆனால் ஐந்து நாட்களுக்குள் இவர்கள் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். முதல் பரிசோதனை சவுதி அரேபியாவிற்குள் நுழைத்து 24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும் மற்றும் இரண்டாவது பரிசோதனை நிறுவன தனிமைப்படுத்தலின் ஐந்தாவது நாளில் நடைபெற வேண்டும். ஐந்தாவது நாளில் நடத்தப்படும் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் பயணி தனிமைப்படுத்தலை முடித்து கொள்ளலாம். தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி சவுதி அரேபியாவில் நுழையும் நபர்களுக்கு ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் ஆகும். இந்த புதிய உத்தரவு வருகின்ற செப்டம்பர்-23,2021 மதியம் 12 மணி முதல் அமலுக்கு வருகிறது எனவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.