அபுதாபில் அரசு துறையில் வேலை செய்து வருகின்ற தமிழர் 6,000 மரக்கன்று நட்டு வனப்பகுதியை உருவாக்கியுள்ளார்
Image : குப்புசாமி மற்றும் அவர் உருவாக்கிய காடு
அபுதாபியில் பணிபுரியும் இந்தியர் 6,000 மரக்கன்று நட்டு காடுகளை உருவாக்கி வருகின்றார்
தர்மபுரி மாவட்டத்தில் 50 சென்ட் விவசாய நிலத்தில், 6,000 மரக்கன்றுகளை நட்டு, அடர்ந்த வனப்பகுதியை அபுதாபியில் அரசு துறையில் வேலை செய்து வருகின்ற தமிழர் ஒருவர் உருவாக்கி உள்ளார். இது தொடர்பான விரிவான செய்தியை இங்கே பார்ப்போம்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பறையப்பட்டிபுதூரை சேர்ந்தவர் குப்புசாமி(வயது-37). இவர் தன்னுடைய 50 சென்ட் விவசாய நிலத்தில் அடர்ந்த வனப்பகுதிகளை உருவாக்க திட்டமிட்டு, அதற்காக சில வருடங்களுக்கு முன்பு பணியை மேற்கொண்டார்.
அபுதாபில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் ஒரு அடி இடைவெளியில் வேம்பு, புங்கன், அரசன், தேக்கு, கொய்யா, மா, பலா, சீதா, நாவல் உள்ளிட்ட 100 வகையான 6,000 மரக்கன்றுகளை நட்டு அதற்கு சொட்டு நீர்ப்பாசன முறையை பயன்படுத்தி வந்தார். இவருடைய அயராத முயற்சியின் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட மர கன்றுகள், தற்போது மரங்களாக வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக காட்சி அளிக்கிறது. இங்கு ஏராளமான பறவையினங்கள் வந்து செல்கிறது. ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்த நிலையில், மரங்களை பராமரிக்க மாத சம்பளத்தில் ஒருவரை வேலைக்கும் வைத்துள்ளார்.
உலகெங்கிலும் விவசாய நிலங்கள்,மற்றும் காடுகள் உள்ளிட்டவை அழிக்கும் பல்வேறு வகையான சூழல் நிலவி வரும் நிலையில், அடர்ந்த வனப்பகுதிகளை குறைந்த இடத்திலேயே உருவாக்க முடியும் என்பதை பொதுமக்கள்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், காடுகள் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் மரக்கன்றுகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.