குவைத் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பான நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்
Image : நேற்றைய அமைச்சரவை கூட்டம்
புதிய முடிவுகள் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது
குவைத்தில் நேற்று(18/10/21) திங்கள்கிழமை பிரதமர் ஷேக் சபா அல் காலித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குவைத் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது குறித்து அமைச்சர்கள் குழு பல முக்கியமான முடிவுகளை எடுத்ததாக அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தித்தாள்கள் நேற்று இரவு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக குவைத் விமான நிலையத்தின் இயக்க திறன் முழுமையாக செயல்படுத்துவது மற்றும் அனைத்து நாடுகளிலிருந்தும் வருகை தருகின்ற நபர்களுக்கு விசாக்கள் வழங்குவது உள்ளிட்டவை அடங்கும்
மேலும் (1)குவைத்தில் பொது இடங்களில் திறந்த வெளியில் முகக்கவசம் அணிவது தேவையில்லை,(2) மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பிராத்தனை செய்கின்ற இடங்களில் விதிக்கப்பட்ட சமூக இடைவெளி இனிமுதல் தேவையில்லை, ஆனால் முகக்கவசம் அணிய வேண்டும், (3) திருமணங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி,(4) அரங்குகள் மற்றும் ஆடிட்டோரியங்கள் திறக்க அனுமதி உள்ளிட்டவை குறித்து நாட்டின் அவசரநிலைகளுக்கான உச்சக் குழுவின் பரிந்துரைகளையும் கவுன்சில் மதிப்பாய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த புதிய முடிவுகள் எந்த தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன. அதேநேரம் குவைத் அரசுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வீட்டு வேலை தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இடையேயான ஒத்துழைப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க முடிவு எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.