குவைத்திலுள்ள உயர்நிலை கல்வித்தகுதி பெறாத 60-வயதுடைய வெளிநாட்டினர் விசா புதுப்பித்தல் என்பது மீண்டும் கேள்விக்குறி ஆகியுள்ளது
60-வயதுடைய வெளிநாட்டினர் விசா புதுப்பித்தல் தொடர்பாக புதிய முடிவும் சாதாரணமான வேலைகளில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது
குவைத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதி இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களின் விசா ஆவணங்களை புதுப்பிப்பதற்கான தடையை நீக்க மனித வளக் குழுவின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வர்த்தக அமைச்சர் டாக்டர்.அப்துல்லா அல் சல்மான் தலைமையில் இன்று(04/11/21) வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதி இல்லாத 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினருக்கான குடியிருப்பு ஆவணத்தைப் புதுப்பிப்பதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனிதவள மேம்பாட்டு இயக்குநரால் விதிக்கப்பட்ட தடை இந்த ஆண்டு ஜனவரி-1,2021 முதல் அமலுக்கு வந்தது. ஆனால் கடந்த மாதம் ஃபத்வா சட்டமன்றக் குழு இந்த முடிவை சட்டப்பூர்வமாக செல்லாது என்று அறிவித்தபோது பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதையடுத்து முன்பு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய மனித உரிமை ஆணையத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று கூடியது. அந்த கூட்டத்தில் விசா புதுப்பித்தல் செய்ய ஆண்டுக் கட்டணம் 500 தினார் மற்றும் தனியார் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணமும் தேவை என்று முடிவை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் இந்தப் பிரிவில் உள்ளவர்களுக்கு ஒரு வருட மருத்துவக் காப்பீட்டுக் கட்டணமாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 1200 தினார் நிர்ணயம் செய்து அதன் கூட்டமைப்பு முடிவை வெளியிட்டுள்ளது. அப்படியானால், இந்தப் பிரிவில் உள்ளவர்களுக்கு ஒரு வருடத்திற்கு விசாவைப் புதுப்பிக்க 1700 தினார் செலவாகும். எனவே இன்றைய புதிய முடிவும் சாதாரணமான வேலைகளில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது என்பது உறுதியாகியுள்ளது.