குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள் பொதுமன்னிப்பு என்ற கனவுடன் தங்கியிருக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
Image : அதிகாரிகள் பரிசோதனை
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
குவைத்தில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள் குறிப்பிட்ட தொகையினை அபராதமாக செலுத்தி நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் புதிய விசாவில் குவைத் திரும்புவதற்கான வாய்ப்புகள் இன்னும் நிலுவையில்(வாய்ப்பு) உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் குடியிருப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் பொதுமன்னிப்பு மூலம் தண்டனையின்றி நாட்டை விட்டு(குவைத்தை விட்டு) வெளியேறுவது அல்லது ஆவணங்களை மீண்டும் சட்டபூர்வமாக மாற்றுவதற்கான இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு மனிதாபிமான அடிப்படையிலான காரணங்களுக்காக நான்கு முறை இப்படிப்பட்ட நபர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன எனவும், எனவே இதற்கு பிறகு அரசாங்கத்திடமிருந்து இந்த பெருந்தன்மை சலுகையினை யாரும் எதிர்பார்க்க வேண்டாம் எனவும் அமைச்சகம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டில் தற்போதைய நிலவரப்படி ஒரு இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று புள்ளிவிபர கணக்குகள் தெரிவிக்கின்றன. அவர்களில் பலர் வருகை(Visit) விசாவில் நாட்டிற்கு வந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இப்படிப்பட்ட நபர்களும் தானாக முன்வந்து அபராதம் செலுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், பாதுகாப்பு பரிசோதனையில் சிக்கினால் இவர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு வளைகுடா(GCC) நாடுகளுக்கு செல்ல முடியாதபடி தடை விதித்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் மேலும் எச்சரித்துள்ளது.