குவைத்தில் ஓட்டுநர் உரிமம் கைவசம் வைக்க தகுதி இழந்தவர்களின் லைசன்ஸ் திரும்பபெற அதிகாரிகளுக்கு அறிவுத்தல்
Image : ஷேக் பைசல் அல்-நவாஃப் அல்-சபா
குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
குவைத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பள வரம்பு மற்றும் Profession(வேலை செய்கின்ற துறை) போன்ற நிபந்தனைகளுக்கு இணங்காத வெளிநாட்டவர்களின் ஓட்டுநர் உரிமைகளை திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஷேக் பைசல் அல்-நவாஃப் அல்-சபா அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தினசரி பத்திரிகையொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி,முன்னர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இணங்க ஓட்டுநர் உரிமம் பெற்று, தற்போதைய தொழில் துறையை மாற்றியது மற்றும் குறைந்த சம்பள வரம்பு போன்ற தகுதிகளை இழந்துள்ள நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும். உதாரணமாக, 600 தினார்களுக்கு மேல் சம்பளம் மற்றும் பல்கலைக்கழக பட்டம் பெற்ற கணக்காளர் தரவரிசையில் உள்ள ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் நபரின் தற்போதைய சம்பளம் எதோ ஒரு காரணத்தால் 600 தினார்களுக்கும் குறைவாக இருந்தால் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதேபோல் முன்னர் ஓட்டுநர் பதவியில் உரிமம் பெற்று தற்போதும் சாதாரண தொழிலாளர்களாக மாறியவர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.
மேலும் செல்லுபடியாகும் பழைய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் அனைவரையும் புதிய ஸ்மார்ட் லைசென்ஸ்க்கு மாற்ற வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவுத்தல் செய்துள்ளது. இதற்கான கடைசி காலக்கெடுவை விரைவில் அமைச்சகம் நிர்ணயிக்கும். புதிய ஸ்மார்ட் லைசென்ஸ்க்கு மாற்றி வழங்குகின்ற நேரத்தில் உரிமம் பெற்றவர்களின குறைந்தபட்ச சம்பள வரம்பு, செய்கின்ற பணியின் தகுதிகள் உள்ளிட்டவை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஷேக் பைசல் அல் நவாப் நேற்று மூத்த அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார் முன்னதாக, 2013 ஆம் ஆண்டுக்கு முன் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தொழில் நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்தப் புதிய முடிவு இந்தப் பிரிவில் உள்ளவர்களுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.