குவைத்தில் பொதுமன்னிப்பு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது
Image : ஷேக் ஃபஹத் அல் யூசுப் அவர்கள்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தாயகம் திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள்
குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல் யூசுப் தெளிவுபடுத்தினார். இதற்காக மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதகால அவகாசம் வழங்கப்படும். குடியிருப்பு சட்டத்தை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும் அல்லது அவர்களின் குடியிருப்பு அனுமதியை அபராதம் செலுத்தி சட்டப்பூர்வமாக்கவும் அவகாசம் அளிக்கப்படும் என்று குவைத் அரசு செய்தி நிறுவனத்துக்கு சற்றுமுன் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி நாடு திரும்பும் வெளிநாட்டவர்களுக்கு குவைத் சட்டம் திட்டங்களுக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் மீண்டும் குவைத்துக்குத் திரும்பி வருவதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். வாய்ப்பைப் பயன்படுத்தாமல் சட்டவிரோதமாக தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாட்டில் சுமார் 1,30,000 அளவுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறுபட்ட காரணங்களால் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குவைத்தில் கடைசியாக பொதுமன்னிப்பு கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பொதுமன்னிப்பு அறிவிப்பு வழங்கப்படும் என்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தாலும் உள்துறை அமைச்சரிடமிருந்து முதல் முறை இது குறித்து உறுதிப்படுத்தல் அறிவிப்பு தற்போது தான் வெளியாகியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு எந்த நாளில் தொடங்கி எப்போது முடியும் மற்றும் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களில் எந்த பிரிவுகளில் வழக்குகள் நிலுவையிலுள்ள தொழிலாளிக்கு இந்த பொதுமன்னிப்பு பொருந்தும் உள்ளிட்ட விரிவான விபரங்கள் பொது மன்னிப்பு தொடர்பான உள்துறை அமைச்சகம் வெளியிடும் அறிவிப்பில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்