அமீரகத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்து நான்கு இந்தியர்கள் உள்ளிட்ட 16 பேர் பலி மற்றும் 9 பேர் காயமடைந்ததனர்
Image : உயிரிழந்த 4 இந்தியர்கள்
துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்
துபாயில் உள்ள தேராவில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையாள தம்பதிகள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக துபாய் சிவில் டிஃபென்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அல் ராஸ் பகுதியில் உள்ள ஃபிர்ஜ் முராரில் உள்ள தலால் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் உள்ள சமூக சேவகர் நசீர் வதனாபள்ளி கூறுகையில், தீ விபத்தில் கேரளா தம்பதி உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்தனர் எனவும், இதில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இதை தவிர மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஒரு நைஜீரிய பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியர்கள் யாராவது உள்ளார்களா என்பது மருந்துவ அறிக்கை வந்த பிறகே தெரியவரும். அதேபோல் காயமடைந்த 9 பேர் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரங்களும் வரும் மணிநேரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
உயிரிழந்த 4 இந்தியர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த காவலாளியாக வேலை செய்துவந்த ரபீக் மற்றும் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை செய்துவந்த இமாம் காசிம் ஆகியோர் தீயினை அணைக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். உயிரிழந்த கேரளா தம்பதியினர் விவரங்களும் வெளியாகியுள்ளது. மலப்புரம் வெங்கரைச் சேர்ந்த களங்கடன் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி என்பதும் தெரியவந்துள்ளது. இறந்த ரிஜேஷ் தேராவில் டிராவல்ஸ் நிறுவன ஊழியராக உள்ளார். இவரது மனைவி ஜிஷி கிசைஸ் கிரசண்ட் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.பக்கத்து அறையில் தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி ரிஜேஷ் மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் ரஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கட்டிடத்தில் சனிக்கிழமை(நேற்று) மதியம் 12.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து தீப்பிடித்ததாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிவில் பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்
Indians Death | Fire Accident | Dubai News