ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்று புறப்பட்ட விமானத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை; 800 மக்களை காப்பாற்றிய நெகிழ்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது
Image : மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விமானம்
ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம் விமானப்படை விமானி சுமார் 800 மக்களை காப்பாற்றிய நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது
ஆப்கானிஸ்தானில் அரசு ஆட்சியை கவிழ்த்து தாலிபான் அந்நாட்டை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிமிடங்களிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். நேற்றைய தினம் தாலிபான் நாட்டை கைப்பற்றிய தகவல் அறிந்த பொதுமக்கள் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையங்களை தகர்த்தெறிந்து உள்ளே புகுந்தனர. அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில் அவர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் எந்த ஒரு பயண அனுமதியும் இல்லாமல் அங்கு நிறுத்தி வைத்திருந்த விமானங்களில் ஏறிய பிறகு விமானங்களை இயக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அங்கு ஏற்பட்ட நெரிசல் மற்றும் கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டிலும் பலர் உயிரிழந்தனர். மேலும் அங்கிருந்து அமெரிக்கா ராணுவத்திற்கு சொந்தமான Boeing C-17 Globemaster விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான மக்கள் சூழ்ந்திருந்த நிலையில் சிலர் விமானத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடி பயணிக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து விமானம் பறந்து உயர்ந்த அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் வேகம் மற்றும் காற்றின் அழுத்தம் காரணமாக சிலர் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகமான காட்சிகளும் வெளியாகி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அந்த விமானத்தின் விமானியின் மனிதாபிமான அடிப்படையில் செய்த சாஹசமான செயல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த விமானத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் புகுந்த நபர்களை வெளியேற்ற வேண்டும் என்பது சர்வதேச சட்டமாகும். ஆனால் விமானி அதில் புகுந்த சுமார் 800 ஆப்கானிஸ்தான் மக்களுடன் அங்கிருந்து புறப்பட்டார். இந்த விமானம் போர் நேரத்தில் சிறிய விமானங்கள் ஹெலிகாப்டர் மற்றும் போர் ஆயுதங்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தும் சரக்கு விமானம் ஆகும். மேலும் அந்த விமானத்தில் போருக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் சுமார் 134 வீரர்கள் அமர்ந்து பயணிக்கும் விதத்திலான இந்த விமானத்தில் தான் இவ்வளவு மக்கள் புகுந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி கத்தார் வான்வெளியில் வைத்து அங்குள்ள Al Udeid விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகளுடன் விமானப்படை விமானி நடத்திய உரையாடலின் ஆடியோ வெளியான நிலையில் தெரியவந்துள்ளது. அந்த ஆடியோவில் உங்கள் விமானத்தில் எத்தனை பயணிகள் உள்ளனர் என்று கேட்க.... சுமார் 800 பேர் வரையில் உள்ளதாக கூறுகின்றார். இதை கேட்டு விமான நிலைய அதிகாரி அதிர்ச்சியில் ஏன்ன பேசுவது என்று தெரியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்த பிறகு அட கடவுளே என்று கூறும் உரையும் அதில் இடம்பெற்றுள்ளது.இதன் மூலம் சாதாரணமாக அழைத்து செல்ல வேண்டிய பயணிகளை விடவும் 6 மடங்கு பயணிகளை அவர் விமானத்தில் ஏற்றி மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த விமானம் சுமார் 77,867 கிலோ வரையிலான எடையினை சுமந்து செல்லும் திறன் கொண்டது ஆகும். அங்கு பிரச்சனை அதிகமாகும் முன்னர் எவ்வளவு மக்களை காப்பாற்ற முடியுமோ அவ்வளவு மக்களை காப்பாற்ற அவர் இதை செய்தார் என்ற நெகிழ்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்தின் அதிக எடையை எடுத்துச்செல்லும் வகையிலான விமானம் இதுவாகும். தற்போதைய உலகின் மிகவும் திறன் வாய்ந்த விமானங்களில் இதுவும் ஒன்றாகும். 1995 முதல் அமெரிக்க விமான படையில் இந்த விமானம் இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் அதிரடியாக மீட்பு நடவடிக்கைக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இதை பயன்படுத்த முடியும். சிறிய விமான ஓடுபாதையில் இறங்கவும், பறந்து உயரவும் முடியும் திறன் படைத்தது. மணிக்கு 830 கிலோமீட்டர் வேகத்தில் இந்த விமானத்தால் பறக்க முடியும். அதிகபட்சமாக 45,000 அடி உயரம் வரையில் பறக்க முடியும். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா, குவைத், கத்தார், அமீரகம், கனடா, ஆஸ்திரேலியா, யு.கே உள்ளிட்ட நாடுகளும் இந்த விமானத்தை பயன்படுத்தி வருகிறது.