குவைத் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் (குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு) “ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமத்தை” வழங்கத் தொடங்கும் என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக குவைத்தின் 6 Governorates யிலும் உள்ள போக்குவரத்துத் துறையின் அலுவலங்களுக்கு நேரடியாக சென்று தற்போதைய உங்களின் ஓட்டுநர் உரிமங்களை ஸ்மார்ட் சிறப்பு அம்சத்துடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமங்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக போக்குவரத்துத் துறையின் அலுவலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரிவில் விண்ணப்பிக்கலாம். புதிய ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. சாதாரணமாக பழைய உரிமங்களை புதுப்பிக்க இதுவரையில் செலுத்திய அதே கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதுமானது. இந்த புதிய ஓட்டுநர் உரிமங்கள் உலகின் எந்த நாட்டிலும் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கிறது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும் என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
புதிய ஓட்டுநர் உரிமங்கள் அதிநவீன பாதுகாப்பு தன்மை மற்றும் தனிநபர் விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளதால் உலகத்தரத்தில் இவை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டுநர் உரிமங்கள் ஒரு ஸ்மார்ட் சிப்பைக் கொண்டுள்ளது, அதில் தனிநபர்களின் அனைத்து தகவல்களும் சேமிக்கப்படுகிறது. இதுபோன்ற ஓட்டுநர் உரிமங்கள் குவைத்தில் இதுவே முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டுநர் உரிமங்களில் மோசடி சாத்தியமற்றது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்பு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம் வளைகுடா நாடுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் நிலையில் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. எனவே இந்தவகை உரிமங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்லும் குவைத்திகள் மற்றும் வெளிநாட்டினர் எதிர்கொண்டு வந்த பிரச்சினைகளுக்கு குவைத் போக்குவரத்துத் துறை ஒரு தீர்வை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.