குவைத் துணைப் பிரதமரின் மனிதாபிமானத்தின் அடிப்படையில் 34 இந்தியர்கள் உட்பட 60 செவிலியர்கள் விடுதலை செய்யப்பட்ட நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது
Image : ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்கள்
அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை
குவைத்தில் கடந்த 23 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்ட 34 இந்தியர்கள் உட்பட 60 சுகாதாரப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களின் நேரடித் தலையீட்டிற்குப் பிறகு, இன்று(04/10/23) புதன்கிழமை பிற்பகல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த செவிலியர்களின் உறவினர்கள் தங்களது சிறு குழந்தைகளுடன் நேற்று இரவு உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். அமைச்சரின் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் வைத்து தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அனைவரையும் விடுவிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து இன்று பர்வானியா குடியிருப்புத்துறை அமைச்சகத்தில் 60 பேரின் குடும்பத்தினர் ஆவணங்களுடன் விடுவிப்பதற்கான நடைமுறைகளை முடிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் இன்று மதியம் 2 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் தலையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவர்கள் கைதானத்திற்கான காரணம் பின்வருமாறு:
குவைத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் மருத்துவமனை சார்ந்த சில ஆவணங்கள் சட்டப்படி இல்லை என்று 34 இந்தியர்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் பிலிப்பைன்ஸ், ஈரான் மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் கடந்த 3 முதல் 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். ஈரானிய குடிமகன் ஒருவரின் உரிமையின் கீழ் பல ஆண்டுகளாக மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் சிலரின் உறவினர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களும் இந்த நிறுவனத்தில் சட்டப்படி பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் Sponsorship யில் சட்டப்படி தான் வேலை செய்து வந்தனர்.
இந்த செவிலியர்களில் 5 பேர் பாலூட்டும் தாய்மார்கள்.இதில், இந்திய கேரளா மாநிலம் அடூரைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஆன குழந்தை இருந்தது. மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அப்பாசியாவில் உள்ள குடியிருப்பில் கணவர் பராமரிப்பில் குழந்தை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் இந்திய தூதரகத்தின் தலையீட்டால், குழந்தைகளுக்கு சிறையில் கொண்டு சென்று தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகளை குவைத் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.
ஆனால் பல குழந்தைகளுக்கு தாயிடமிருந்து உண்மையான கவனிப்பு கிடைக்காத காரணத்தால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் மனிதாபிமான அடிப்படையிலான தலையீடு மூலம் அனைவரும் விடுதலை ஆகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்
Indian Nurse | Kuwait MOH | Kuwait Minister